கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை 35 நாட்களுக்கு பிறகு நாளை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழகம் முழுவதும் பாஜகவினர் கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
''டாஸ்மாக் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை என முதல்வர் செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் பெட்ரோல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.