புதுக்கோட்டையில் குடிக்கின்ற தண்ணீரில் மர்ம நபர் இயற்கை உபாதை கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியின் இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.
இந்தத் தொட்டியிலிருந்து வழங்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள மணிகண்டன் மகன் கோமித்திரன் (3), கண்ணதாசன் மகள் தீபிகாஸ்ரீ (2½), கனகராஜ் மகள் கோபிகாஸ்ரீ (6), செல்வம் மகள் பூர்வசாமிலி ஆகியோருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் கோபிகாஸ்ரீ மட்டும் இன்னும் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிதண்ணீர் தான் பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கிராமத்தினர் சிலர் இன்று காலை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். பொதுமக்களுக்கான குடிநீரில் இயற்கை உபாதை மிதந்து கொண்டிருந்தது. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் சம்பவ இடத்திற்கு வந்த விசிக நிர்வாகிகள், குடிதண்ணீரில் இயற்கை உபாதை கழித்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.
தகவல் அறிந்து வந்த அன்னவாசல் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த நிலையில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வந்து பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு நம்மிடம் பேசும் போது, “இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீருக்காக ஒரு தொட்டியும் மற்ற பயன்பாடுகளுக்காக ஒரு தொட்டியிலிருந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் குடிநீர் தொட்டியில் தான் இப்படி செய்திருக்கிறார்கள். தற்போது அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருக்கிறார்கள்.
போலிசார் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல விரைவாக குடிநீர் தொட்டி மற்றும் குழாய்களைச் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஊராட்சி ஒன்றியம் சார்பில் கேமரா பொருத்துவதாக உறுதியளித்துள்ளனர்” என்றார். கிராம மக்களோ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.