![Solomon Pappaiah says with pain that the country will be sold](http://image.nakkheeran.in/cdn/farfuture/GhR-G-6UX0eVyNJdyKVTM946qXBsXrQBitKa2Bd_NC8/1700114816/sites/default/files/inline-images/solomon-ni.jpg)
மதுரை அரசரடியில் ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனி இடத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்திற்குப் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா, மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தனது கையெழுத்தை பதிவு செய்துள்ளார். சாலமன் பாப்பையா கையெழுத்திட்ட வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய சாலமன் பாப்பையா, “இந்த மைதானத்தில் எங்கள் பிள்ளைகள் விளையாடுவார்கள். என்னால் அங்கு செல்ல முடியவில்லை என்றாலும், முதியவர்கள் பலரும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சியை நான் தினமும் பார்க்கிறேன். இது மக்களின் சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தை தனியாருக்கு விற்கப் போகிறார்கள் எனச் சொன்னால், போறப் போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. என்றைக்கும் போலவே அங்கு மக்கள் போகவும், நடக்கவும், விளையாடவும் உள்ள இடமாக இந்த மைதானம் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.