ஓங்கி தாங்கி உயரமாக வளரக்கூடிய கற்றாழை செடி மரபணு மாற்றத்தால் வளைந்து நெளிந்து பாம்பு போல் வளர, அதனையே திடீர் நாகராணி அம்மனாக கருதி பொட்டு வைத்து, பூச்சூடி மகிழ்கின்றனர் பக்தர்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோவிலூர் நான்கு வழிச்சாலையில் வளைந்து நெளிந்து பாம்பு போல் 10 அடி உயரத்திற்கு நீண்டு வளர்ந்திருக்கின்றது. கற்றாழை வகையிலால செடி. தற்பொழுது ஊரில் மழைப்பொழிவும் மிதமாக இருக்கவே அபாரமாக வளர்ந்து வருகின்றது அக்கற்றாழைச்செடி. கடந்த பத்து நாட்களாக மக்களோ அந்த கற்றாழைச்செடிக்கு பொட்டு வைத்து, மாலையிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து நாகராணி அம்மனாகவே வழிப்பட்டு வருகின்றனர்.
அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அதனை வணங்காமல் அப்பாதையினை கடப்பதுமில்லை. இந்நிலையில், அப்பகுதியில் கூலி வேலைக்கு வந்த பெண் ஒருவருக்கு சாமி வந்து பாம்பு டான்ஸ் ஆடி, "யேய்.!! நான் நாகாத்தா வந்திருக்கேண்டா.!! உங்க குறைகளையெல்லாம் களைவேண்டா.! இங்கேயே எனக்கு கோவில் எழுப்புங்கடா..?" அருள் வாக்கு கூறியது வாட்ஸ் ஆப்- களில் வைரலாகி வருகின்றது. வேப்பமரத்தில் பால் வடிவது, பிள்ளையார் பால் குடித்தது வரிசையில் இதனைக் கடந்து செல்வோரும் உண்டு.