ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஈரோடு மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று பன்னீர்செல்வம் பார்க் முதல் அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று(14.11.2024) மூன்றாவது நாளாக அரசு மருத்துவமனை ரவுண்டானாவிலிருந்து மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் கார்னர் எல்லை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கழிவு நீர் மறைத்து கட்டப்பட்ட சிமெண்ட் ஸ்லாப்புகள், விளம்பரப் பதாகைகள், போர்டுகள் என 200 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றிய போது கடை வியாபாரிகள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அவற்றுப் பணி நடந்து வருகிறது.