திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.