கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து 4 பேருந்துகளில் கோவிலுக்கு சென்று இன்று நான்கு கர்நாடக அரசு பேருந்துகளில் ஊர் திரும்பி உள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் செல்லும் போது பக்தர்கள் வந்த மூன்று பேருந்து கடந்த நிலையில் நான்காவதாக வந்த பேருந்து முன்னாள் மண் (M SAND) ஏற்றிச்சென்ற லாரியை ஓவர் டெக் செய்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக எதிரே ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது பக்தர்கள் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. மேலும் பின்னால் வந்த மண் லாரியும் பேருந்தின் பின் பக்கம் மோதி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து 3 வாகனங்களும் நொறுங்கி கோர விபத்து நடந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பெண்கள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். இக் கோர விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார்? எந்த வாகனத்தில் வந்தவர்கள் என அடையாளம் காணாத சூழலில் அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.