கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழக வீதிகளில் நீதிகேட்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 28 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அக்கா நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி 161வது சட்டப்பிரிவின்படி, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய 6 மாதங்களை நிறைவுசெய்ய இருக்கிற நிலையில் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது காலதாமதம் செய்து வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
கால் நூற்றாண்டு காலமாகக் கால்கடுக்க இந்நிலமெங்கும் சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் களத்தில் நிற்கும் நமது தாய் அற்புதம்மாள் சிந்தியக் கண்ணீரையும், வலியினையும் வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் நடந்தப் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு எழுவரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
ஆகவே, எழுவரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கோரியும், அதனைப் பெறத் தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தம் தரக்கோரியும் வருகிற மார்ச் 09 அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி ஆகியப் பெருநகரங்களில் மாலை 04 மணி முதல் 06 மணிவரை மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. அதுசமயம், அதற்கான முன்னெடுப்புகளிலும், ஒருங்கிணைப்புகளிலும் தங்களை இணைத்துக் கொண்டு களப்பணியினை செய்யுமாறு நாம் தமிழர் தம்பிமார்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கண்ணீர் வடிக்கும் நமது வீரத்தாய் அற்புதம் அம்மாளின் கண்ணீரைத் துடைக்கவும், ஏழு தமிழர்களையும் சிறைமீட்கவும் மானத்தமிழரெல்லாம் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மாபெரும் மக்கள் திரளாக அணிதிரள வேண்டுமெனத் தமிழ் மக்களுக்கு பேரழைப்பு விடுக்கிறேன். இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழக வீதிகளில் நீதிகேட்போம்! நம் உடன்பிறந்தார்கள் எழுவரையும் சிறைமீட்போம்!
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.