அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியிருப்பது தேர்தலுக்காக செய்ததுபோல் இல்லாமல் திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்றையஎ தினம் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியிருப்பது வரவேற்புக்குரியது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.
அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மக்கள் பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்ததை நாம் அறிவோம். இப்படி போராட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் ஆளுங்கட்சி சார்பில் திட்டத்தை நிறைவேற்றி தருகிறோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு பலமுறை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.
அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களால் சட்டசபையில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான போராட்டம் மக்கள் மத்தியில் மிகவும் தீவிரமடைந்தது.
2016–ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னர் இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதன் விளைவாக சட்டசபையில் ஜெயலலிதா அவர்கள் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு ஆரம்பக்கட்ட கள ஆய்வுக்கு 3 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு மீண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவது போல நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
2016 -ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை கொங்குமண்டல மக்களிடத்தில் கொடுத்தார். 2016 –ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் கொங்குமண்டலம் கொடுத்த வெற்றியால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
ஆனால் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான தமிழக அரசின் விரிவான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கான காரணங்களாக கூறப்பட்டது.
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் தமிழக அரசால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் அறிவித்து பல வருடங்கள் கடந்தும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான தமிழக அரசின் விரிவான அறிக்கைகளும் பலமுறை மாறி இருக்கின்றன.
சட்டசபையில் ஒவ்வொருமுறையும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்காக அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாக இல்லாமல் இத்திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று கொங்குமண்டல மக்களின் சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.