உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை பரிசீலித்திட மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், ‘அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுவதால், உரிய அங்கீகாரம் மக்களிடம் இருந்து கிடைக்காமல் போய்விடுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு புதிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. அதில் தேர்தலில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒரே சின்னம் ஒதுக்கிட வகைசெய்யும் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்களில் ஒரே சின்னம் கிடைக்காத நிலை புதிய தமிழகம் கட்சிக்கு உருவாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இந்தப் புதிய அறிவிப்பாணை அங்கீகாரம் பெறாத கட்சிகளை ஒடுக்கும் விதமாக உள்ளது. எனவே, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 65 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட போது, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள் விதிப்படி, எங்கள் கட்சிக்கு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஒரே சின்னமாக தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கியது போல், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலும் எங்கள் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சித் தலைவர் மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, முடிவை மனுதாரருக்குத் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.