
ராஜீவ்காந்தி வழக்கில் கைதானவர்களில் சிலர் வேலூர் சிறையில் இருக்கிறார்கள், இன்னும் பிறர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல்தான் நானும் இருந்தேன். ஈழப்போர் தொடர்ச்சியாக நம் மக்கள் கொன்றழிக்கப்பட்ட அந்த கொடுமையைத்தாங்க முடியாது தமிழக வீதிகள் எங்கும் கொந்தளித்து, குமுறி வெடித்து பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ச்சியாக சிறைபடுத்தப்பட்டேன். இலங்கை ராணுவம் நமது மீனவர்களைத் தொடர்ச்சியாக படுகொலை செய்துகொண்டிருந்த காலத்திலே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் இதுபோல் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம், மீனவனை நீ அடித்தால், உன் மாணவனை நான் அடிப்பேன் என்று பேசிவிட்டு கட்சி அலுவலகம் செல்லும் முன்பே கைதுசெய்ய காவல்துறையை அனுப்பியது மதிப்புமிக்க ஐயா கலைஞரின் அரசு.
ஐயா ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு, அந்த 7 பேரையும் மாநில அரசே விடுதலை செய்யலாம், மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்று சொன்னபிறகு, ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். கருணாநிதி அவர்களுக்குகூட ஏழுபேரின் விடுதலை என்ற ஒரு கனவு இருந்தது என்று கூறினார்கள். அது கனவாகதான் இருந்தது. ஆட்சியிலிருக்கும்போது அதுபற்றி பேசவில்லை. ஐயா சதாசிவம் அவர்கள் ஏழுபேரை விடுதலை செய்யலாம் என்ற மனநிலைக்கு வந்தபோது தேர்தல் சமயத்தில் இந்தமாதிரி தேர்தல் சமயத்தில் அந்தமாதிரி முடிவெடுத்தால் வருகின்ற சாதக, பாதகங்களை மனதில் வைத்துக்கொண்டு நீதிபதிகள் பேசவேண்டும் என்ற அறிக்கையை அனுப்பி அதை முடித்துவிட்டார்.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று ஒரு தீர்மானம் போட்டார், அதற்கு மத்திய அரசின் கருத்துகளை கேட்டார்கள், மத்திய அரசு மறுத்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியும். விமர்சகர்கள் சொல்கிறார்கள் அது சும்மா ஒப்புக்கு போட்டது என்று. ஒப்புக்கு போட்டாலும் போட்டார் என்ற பார்வையும் உண்டு. ஆனால் அதைக்கூட இவர்கள் சொல்லவில்லை.