ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் 1100 ஏக்கரில் ரூபாய் 1,022 கோடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி, மீன் பண்ணை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், பால் வளம் உள்ளிட்டவை அடங்கிய கால்நடைப்பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இன்று (09/02/2020) முதல் பிப்ரவரி மாதம் 11- ஆம் தேதி வரை நடைபெறும் கால்நடை கண்காட்சியையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், காமராஜ், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், துறைச்சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா சேலம் தலைவாசலில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பூங்கா அமைக்க முதற்கட்டமாக ரூபாய் 396 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.