![Seeman personally paid tribute to Vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/U5iEVXQWfku6eGE2ThqPGbYGu43wjPg780oS7XhEj9U/1703825865/sites/default/files/inline-images/th-6_237.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ விஜயகாந்த் என்றாலே; அச்சமின்மையும் துணிவும்தான்; தவசி படத்தில் நான் தான் உரையாடல் எழுதினேன். அப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றவும், நிறைய நேரம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. விஜயகாந்த் போன்று நடிக்கவும், சண்டைபோடவும் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் அவர் மாதிரி ஒரு சிறந்த மனிதர் வருவது மிகவும் கடினம். திரையுலகில் புகழின் உச்சிக்கு சென்ற பிறகு தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டார். எல்லாரிடமும் சமமாக பழகக்கூடிய ஒரு மனிதர் விஜயகாந்த். அவரை போன்று திரையுலகின் வேறு யாரும் இல்லை. ரஜினி, கமல் என யாரா இருந்தாலும் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள்; அனைவரும் விஜி விஜி என்று பாசமாக இருந்தார்கள். அதற்கு காரணம் அவர் எல்லார் மேலயும் வைத்த பாசம் தான். அப்படிப்பட்ட மனிதர் தற்போது இல்லை என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.
விஜயகாந்த் மட்டும் முழு உடல்நலத்துடன் இருந்திருந்தால் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியிருக்கும்; அப்படி போக்கையே மாற்றியவர்தான் விஜயகாந்த். முதல் தேர்தலிலே 6 சதவீத வாக்கும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் 10.5 சதவீத வாக்கு என மேலே போகும் போது, அதுவும் கலைஞர், ஜெயலலிதா என்று பெரும் தலைவர்கள் இருக்கும் போது பெரும் துணிச்சல் வேண்டும். அதனால்தான் அவரை துணிச்சல்காரர் என்று சொல்கிறோம்; கடினமான உழைப்பாளி. வெயில், மழை, பசி, பட்டினி, 3, 4 நாட்கள் தூங்காமல் எல்லாம் நடிப்பார். அந்த மாதிரி தமிழ்த் திரையுலகில் யாரும் இல்லை; அவரை நல்ல மனிதர் என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது; ஆகச்சிறந்த மனிதர்;
படபிடிப்புக்கு சென்று அவர்கள் கொடுக்கும் பேண்ட், சட்டைகளை அணிவாரே தவிர; மற்றபடி அனைத்து நேரமும் கதர் சட்டை, கதர் வேஷ்டி மட்டும் தான் அணிவார். மிகவும் எளிமையான மனிதர். அப்படிப்பட்ட மனிதர் இல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது. எப்படி வெள்ளம் போன்ற பேரிடர் வந்து பேரிழப்பை தந்ததோ, அத போன்றுதான் விஜயகாந்த்தின் இழப்பு ஒரு பேரிடரை போன்று பேரிழப்பை தந்துள்ளது” என்று வருத்தத்துடன் பேசினார்.