![Seeman being run by right-wing ideologues](http://image.nakkheeran.in/cdn/farfuture/TD4JU6qtqfEwy0RuXGDrAiUHe8J3czeuHPc7VGA8maQ/1732616440/sites/default/files/inline-images/35_98.jpg)
தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 'மாவீரர் நாள்' பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தனியரசு, பச்சைத்தமிழகம் அமைப்பின் தலைவர் சுப.உதயக்குமார், பாரிசாலன் உள்ளிட்ட தமிழ் தேசிய உணர்வாளர்கள் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்களான வெற்றி குமரன், வழக்கறிஞர் பிரபு, தனசேகரன், புகழேந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். வெற்றி குமரன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து வந்த 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் தங்களை இணைந்துக்கொண்டுள்ளனர்.
உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்துவந்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் தொடர்ந்து பயணித்து வருகிறோம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வலதுசாரி சித்தாந்த வாதிகள் இயக்கி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்ததில் இருந்து, சீமானை யார் இயக்குகிறார்கள் என்கின்ற உண்மை புலப்படுகிறது. தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும், போராடி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் 10,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்” என்றார்.