வாலிபர் சங்கத்தினர் சிறையில் அடைப்பு: சி.பி.எம். கண்டனம்
புதுக்கோட்டை, செப்.9- ; நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைதுசெய்துள்ள புதுக்கோட்டை போலீசார் அவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினரும் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமையன்று சாலைமறியல் போராட்டம் நடத்துவதற்கு வாலிபர் சங்கத்தினர் திட்டமிட்டு இருந்தனர். நீதிமன்றம் சட்டம் ஒழுங்குப்பிச்சினைக்கு பாதிப்பு வராதபடி போராட்டங்களை நடத்த அறுவுத்தியதன் அடிப்படையில், வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மனுக்கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதற்காக போலீசார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்ததோடு மட்டுமல்லாது அவர்கள் மீது பொய்யாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்துள்ளனர். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத்தினர் மீது காவல்துறை எடுத்துள்ள இத்தகைய அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய மாநில அரசம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 16 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-இரா. பகத்சிங்