![schools online classes chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/5I9ipBxe_gqiTaM9CBHujOir2De-R4lNn3s0ZlvSJr8/1599702332/sites/default/files/inline-images/online%20class%20%281%29.jpg)
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை, இணைய வழியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாமென, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பின் சாராம்சம் இது -
கரோனா காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்த புது வகையான கல்வி திணிக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலை திரும்பும்வரை, இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த தொழில்நுட்பக் கல்வியை எட்ட முடியாது.
ஆன்லைன் வகுப்புகளில் வருகைப்பதிவு, தேர்வு, குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமான நேரத்துக்கு வகுப்புகள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டி விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள போதுமான மொபைல்கள் இல்லாமலும், இணையதள இணைப்பு இல்லாமலும், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கல்வி நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து குறைகளைக் கண்டறிய வேண்டும்.
அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, வகுப்புகளை சமூக நலக் கூடங்களில் நடத்தலாம். மாணவர்களால், இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாவிட்டால், தனிமனித விலகலைப் பின்பற்றி அவர்களை வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்யும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் வகுப்புகளைத் தவற விடக்கூடாது என்பதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலி வகுப்பறைகளையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
![schools online classes chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/-0KAg-4Ld7QphP8hXnmQ7BBR4QZByqXwAiMNJKHiIew/1599702396/sites/default/files/inline-images/CHENNAI%20HIGH%20COURT%202_3.jpg)
நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள் இவை-
ஆன்லைன் வகுப்புகளுக்காக மத்திய- மாநில அரசுகள் பிறப்பித்துள்ள வழிகாட்டி விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
விதிகளில் கூறப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும். இதை மீறும் பள்ளிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வகுப்புகளை வாட்ஸ்-ஆப் மூலம் பெற்றோருக்கு அனுப்ப வேண்டும். பள்ளி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.
மாநில அரசு, விதிகளை தமிழில் மொழி பெயர்த்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும். அதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆபாச இணையதளங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம். அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும்.