![schools online class students and parents chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/AR9Y8QqkV2gztM25xVPDOPrVBqk691YGON6kollXQ3M/1599614808/sites/default/files/inline-images/CHENNAI%20HIGH%20COURT%202.jpg)
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியர் ஆபாச இணைய தளங்களைக் காணக் கூடும் என அச்சம் தெரிவித்து, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.
![schools online class students and parents chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/OFhBA3p_-dc5PqHZdh75uvr5HjO6DfHlJXP4pGkFlyM/1599614875/sites/default/files/inline-images/e-learning_1200_0.jpg)
1-ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புக்களும் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களைக் காண நேரிடும் எனவும், இதைத் தடுக்க உரிய விதிகள் வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
அரசுத் தரப்பில், டிஜிட்டல் கல்வி நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராகப் புகார்கள் வந்தால், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் மட்டுமல்லாமல், பள்ளிகள் தரப்பிலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று (09/09/2020) காலை 10;30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர்.