Skip to main content

மாணவிகளுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வழங்கிய பசுமைப் பள்ளி ஆசிரியர்கள்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

தமிழ்நாடு அரசு ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி நாளாக கொண்டாடி வருகிறது. இந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் இனிப்புகள், சர்க்கரைப் பொங்கல் வழங்கியும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தியும் பரிசுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி 7.5% உள் இடஒதுக்கீட்டில் 4 ஆண்டுகளில் 19 மாணவிகளை மருத்துவர்களாகவும் அதற்கு முன்பு பல மருத்துவர்களையும், பலநூறு பொறியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்களையும் உருவாக்கிய, பிளாஸ்டிக் ஒழித்து சில்வர் தண்ணீர் குடுவை, மண்பானையில் தண்ணீர், பசுமையைப் போற்றி தமிழ்நாட்டிற்கே முன்னோடிப் பள்ளியாக விளங்கும்  கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை பசுமைப் புரட்சி செய்யும் விதமாக கொண்டாடியுள்ளனர்.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினத்தில் மாணவிகளுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரிப்பது போல கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கும் விதமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் 1100 மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்குவதுடன் மஞ்சப்பையில் வைத்து மரக்கன்றுகள் வழங்க முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜரை போற்றும் பாடல்களை மாணவிகள் பாடினர். வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மற்றும் எஸ்எம்சி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பசுமையைப் போற்றும் மஞ்சப்பையில் மரக்கன்றுகளை மாணவிகளுக்கு வழங்கி கடலை மிட்டாய்களும் வழங்கினர். மாணவிகளும் உற்சாகமாக மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும் போது, கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவானதில் இருந்து தொடர்ந்து சாதிக்கும் பள்ளியாகத் தான் உள்ளது. நீட் வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் ஒன்று, இரண்டு மாணவிகள் மருத்துவம் படிக்கவும், ஏராளமான மாணவிகள் பொறியியல், பட்டம், வழக்கறிஞர், ஆசிரியர் பயிற்சி படிக்கவும் சென்றனர். ஆனால் நீட் வந்த சில ஆண்டுகள் எங்கள் மாணவிகள் தடுமாறினார்கள். ஆனாலும் சோர்ந்து போகாமல் முயற்சி செய்தனர். அப்போது தான் தமிழ்நாடு அரசு அரசுப பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தனர். அந்த ஆண்டில் தொடங்கி தொடர்ந்து 19 மாணவிகளை மருத்துவம் படிக்க அனுப்பி உள்ளோம். அதே போல பல்வேறு படிப்புகளிலும் சாதிக்கின்றனர். தேர்ச்சியிலும் சாதித்தோம்.

மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக மண்பானையில் தண்ணீர், சில்வர் குடுவையின் பயன்பாட்டை கொண்டு வந்தோம். பள்ளி வளாகம் பசுமை இப்படி பல்வேறு முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தோம் இதன் பயனாக பல்வேறு விருதுகள் கிடைத்தது இப்போது தமிழ்நாடு அரசின் பசுமைப் பள்ளியாக தேர்வாகி உள்ளது.

அதேபோல காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஐ கல்வி நாள் என்பதை மாணவிகள் மறந்துவிடக் கூடாது என்பதால் எப்போது அவர்கள் பார்வையில் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சப்பையில் மரக்கன்றுகளை ஆசிரியர்கள் சொந்த செலவில் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை நடும் மாணவிகள் ஒவ்வொரு நாளும் அதனைப் பார்த்துவிட்டு தான் பள்ளிக்கு வருவார்கள் இதனால் 1100 மரங்களையும் வளர்க்கிறோம் என்று பெருமையாக உள்ளது என்றனர்.

இந்தப் பள்ளியின் இந்தத் தொடர் சாதனைக்காக கல்வித்துறை அமைச்சர் விரைவில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்