Skip to main content

சந்திரயானை கொண்டாடும் பள்ளி மாணவர்கள் (படங்கள்) 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. உலகிலேயே நிலவின் தென் துருவத்தை முதன் முறையாக ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை மாலை 6:04 மணிக்கு நிலவை அடையவுள்ளது. விண்வெளியில் நாளை புதிய சாதனை படைக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இறங்குவதை முன்னிட்டு பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

 

சென்னை குளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் உயர் வகுப்புகளைச் சேர்ந்த 2000 பள்ளி மாணவ - மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விதங்களில் நிலவு தொடர்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அந்த பள்ளி மைதானத்தில் 100 அடிக்கு 100 அடி மொத்தம் 10,000 அடி பரப்பில் நிலவை மாணவர்கள் வடிவமைத்தனர். அதில், நிலவின் மேல் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்திருந்தனர். 7 அடி உயரம் 4 அடி அகலம் கொண்ட நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரை போல் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

 

அதைத் தொடர்ந்து, 14 அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான சந்திரயான் 3 விண்கலம் போல் ஒன்றை வடிவமைத்து பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அங்கு இருந்த 200 மாணவிகள் தங்கள் முகத்தில் நிலவு போல் வர்ணம் பூசி, விக்ரம் லேண்டர் படம் கொண்ட டி-ஷர்ட்டை அணிந்து  நின்றனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் குழும சி.இ.ஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்