சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 09/01/2025 அன்று மாநகர பேருந்தின் மீது ஏறி அட்டகாசம் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி இருந்தது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த 09/01/2025 அன்று பொங்கல் விழா நடைபெறுவதால் மாணவ மாணவிகள் காலை 10 மணிக்கு கல்லூரி விழாவுக்கு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் சில மாணவர்கள் தாமதமாக வந்தனர். இதனால் கல்லூரின் நுழைவுவாயில் மூடப்பட்டது. இதனால் தாமதமாக வந்த கல்லூரி மாணவர்கள் கீழ்ப்பாக்கம் சாலையில் சென்ற '15 பி' என்ற அரசு பேருந்து மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் மீது ஏறி அட்டகாசம் செய்ததோடு சாலையில் இடையூறு செய்தபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக கல்லூரி மாணவர்களை நெறிப்படுத்த முயன்ற பொழுதிலும் கட்டுப்படாமல் மாணவர்கள் சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், இது தொடர்பாக 30 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.