மக்கள் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
அண்மையில் விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து இது விவாத பொருளாக மாறியது. விஜய் ஆளுங்கட்சியினரைதான் இவ்வாறு பேசுகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இதற்கு கமல், திமுகவில் சிலர் ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவினர் இதற்கு முழுமையாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”மக்கள் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் உட்கார வைத்திருக்கிறார்கள். விஜய் யாருடைய பேச்சை கேட்டு அந்த கருத்தை பேசியிருப்பார் என தெரியவில்லை. ஆனால், தன்னுடைய படம் ஓடவேண்டும் என்பதற்காக தன்னை அறியாமல் பேசியிருக்கிறார். கடந்த தீபாவளிக்கு முதலமைச்சரிடம் அழைத்து சென்று பார்க்கவில்லை என்றால் மெர்சல் படம் வெளியாகியே இருக்காது. விஜய் போன்றவர்களின் பேச்சை கேட்டு மக்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். நடிகர் விஜய்யின் படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அது அவருடைய மனசாட்சிக்கு” தெரியும் என்று கூறியுள்ளார்.