செங்கல்பட்டில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் காஞ்சிபுரத்தில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தது தெரிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரசவ வலியால் துடித்த அப்பெண் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆவணத்தில் அவருக்கு 16 வயது என தெரியவர காதலன் தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக மருத்துவர்களிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அப்பெண்ணை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் வேதனையடைந்த அவர் குழந்தையுடன் அதிகாலை நேரத்தில் மாயமாகிவிட்டார்.
தன்னுடைய மகளையும் பச்சிளம் குழந்தையையும் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அந்தச் சிறுமி குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லை எனவே பாழுங்கிணற்றில் வீசி கொன்று விட்டதாகக் கூறி குழந்தை வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.
பிரசவ அவசரம் என்பதால் ஆவணங்களை சரி பார்க்காமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் விசாரணையில் அவருக்கு 23 வயது என்பது தெரிய வந்துள்ளது. 16 வயது கொண்ட அவருடைய சகோதரியின் அடையாள அட்டையை வைத்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் தனக்கும் ஏற்பட்ட காதலில், தான் கர்ப்பமானதாகவும், தான் உடல் மெலிந்து இருப்பதால் ஜெர்கின் போட்டு கர்ப்பமானதை மறைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை பாழுங்கிணற்றில் வீசி கொலை செய்த அப்பெண் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.