திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் மும்மத பண்டிகைகளையும், தேசிய விழாக்களையும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி தாளாரும், நிர்வாக அறங்காவலருமான சிவக்குமார் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அந்த விழாவிற்கு பள்ளி முதல்வரும், அறங்காவலருமான திலகம் முன்னிலை வகித்தார். பள்ளி துணை முதல்வர் வெண்ணிலா வரவேற்று பேசினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் பொங்கல் வைத்து விவசாயிகளை காப்பாற்றும் தெய்வங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் சுவாமிக்கு படைக்கப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு, வாழைப்பழத்தை பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளை, பசுமாடுகளுக்கு கொடுக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாணவர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கலை கொடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு பானை உடைத்தல், சாக்குபோட்டி, பலூன் உடைத்தல், பரமபதம், பல்லாங்குழி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, கயிறு இழுத்தல் உட்பட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய பள்ளியின் அறங்காவலரும் முதல்வருமான திலகம், “மற்ற பண்டிகைகளைவிட பொங்கல் பண்டிகையை நாம் எதற்கு கொண்டாடுகிறோம் என்று ஒவ்வொரு மாணவ மாணவியரும் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகையை எங்கள் பள்ளி மாணவர்கள் திருவிழா போல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது ”என்று கூறினார். இந்த சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் உட்பட கரும்பு உட்பட இனிப்புகள் வழங்கப்பட்டது. அதோடு மாணவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் ஜல்லிக்கட்டுகாளை மற்றும் பசுமாடு அழைத்து வந்து கரும்பு மற்றும் பொங்கல் கொடுத்து மகிழ்வித்தனர்.