பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்பட்டுவந்தது. காஞ்சிபுரம் சீதா கிங்ஸ்டன் மேல்நிலைப் பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சில வருடங்களாக வாடகையின் அடிப்படையில் இயங்கிவந்தது.
அதன் பின்னர் வாடகைப் பணம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பு, பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று (15.06.2021) மாலை பள்ளியின் சாவியைப் பள்ளியின் முதல்வரிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது நடைபெற்றது.
அதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வி ஆணையர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பள்ளியை மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். சாவியைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தக் கண்ணீர்விட்டு தமிழ்நாடு முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.