![School bus accident near cuddalore district](http://image.nakkheeran.in/cdn/farfuture/N1atr2VA8hjhefljJ24aC4jI2LqV_VrHjEV_Wl_CmsA/1657191479/sites/default/files/inline-images/th-1_3317.jpg)
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் எனும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு பிள்ளைகள் அந்தப் பள்ளி பேருந்துகளில் பயணிப்பார்கள்.
இன்று காலை திட்டக்குடி பெருமுளை, சிறுமுளை, ஐவனூர், ஆலம்பாடி, கணக்கம்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10, 11, 12ஆம் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி பேருந்து பாசார் பள்ளிக்கூடம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த பேருந்தை பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த பேருந்து, கணக்கம்பாடி என்ற ஊர் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் சென்று பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சில மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்து குறித்து அறிந்ததும், பிள்ளைகளின் பெற்றோர்கள் விபத்து நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.