சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் பெங்களூருவில் ஓய்வெடுத்துவரும் சசிகலா, பிப்.7 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த திருமண விழாவில் பேசிய டி.டி.வி.தினகரன், ''உண்மையான தொண்டர்கள், விசுவாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலா தலைமையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். ஜெயலலிதா ஆட்சியை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்'' என்றார். மேலும் வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.