Skip to main content

“மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை” - அமைச்சர் சேகர்பாபு

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
Minisiter sekarbabu answered Ramadoss issue

சென்னை கண்ணகி நகரில் நேற்று(25-11-24) ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்” என கூறிவிட்டு சென்றார்.

முதல்வரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களுடைய உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை. அதை விட்டுவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாஸை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி உள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லை என்றால் 2006இல் கலைஞர் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை.  எங்களுடைய உரிமை. அதனால் அறிக்கை விடுகிறோம்.தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் தான் அறிக்கை விடுகின்றோம். அந்த நல்ல யோசனைகளைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இந்த நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது, “எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதல்வர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணிக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதல்வருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதல்வர் அதற்குண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் எள்ளளவும் தவறு இல்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்