Skip to main content

“தேர்தல் தோல்விக்குக் கூட்டணிக் கட்சிகளே காரணம்” - காங்கிரஸ் அமைச்சர் குற்றச்சாட்டு!

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
Congress minister alleges uddhav thackarey and sharad pawar for election failure

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று கடந்த 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்,  பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய கட்சிகள் திட்டமிட்டப்படி பரப்புரையில் ஈடுபடவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவல் ஆச்சரியமளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் அல்ல, தேர்வு செய்யப்பட்ட முறையில் ஹேக் செய்யப்படுகின்றன. அவர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன். அதைத்தான் நாங்கள் விவாதித்தோம்.

சில மாநிலங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதில்லை ஏனென்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் நம்ப வேண்டும் என்று காண்பிக்கிறார்கள்.  இவிஎம் ஹேக் காரணமாக மகாராஷ்டிராவை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. வியூகம் வகுப்பதிலும் தோல்வியடைந்து விட்டோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் வரை அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிகிறது. வாக்குச் சீட்டு வர வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. 

Congress minister alleges uddhav thackarey and sharad pawar for election failure

கடைசியில் நாங்கள் டிக்கெட்டை அறிவித்ததால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. சரத் ​​பவார் குழுவும், உத்தவ் தாக்கரே குழுவும் சரியாக இணையவில்லை, திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்யவில்லை. எங்களுக்கு அதிக இடங்களை வழங்கவில்லை. விதர்பா பகுதியில் குறைந்தபட்சம் 50க்கும் மேற்பட்ட இடங்களையாவது எதிர்பார்த்தோம்” என்று கூறினார். கர்நாடகா மாநில உள்துறை அமைச்சரான பரமேஸ்வரா, மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளாராக பதிவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்