பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவித்திருந்தது.
ஜனவரி 14ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், அந்த தேதிகளில் தேர்வை நடத்துவது சரியல்ல என அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, ‘பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு தேதிகளை மாற்றுமாறு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.
சி ஏ. பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2025) அன்றும், உழவர் திருநாள் (16.11.2025) அன்றும் முறையே வணிக சட்டங்கள் (Business laws மற்றும் திறனறிவு (Quantitative Aptitude) தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அறுவடைத் திருநாளான’ பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு தேர்வர்களுக்குச் சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பொங்கல் தினத்தன்று சி.ஏ தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு வந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி நடக்கவிருந்த சி.ஏ தேர்வு, ஜனவரி 16ஆம் தேதியன்று நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்அறிவித்துள்ளது.