உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் நேற்று முன் தினம் (24-11-24) முதல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்க 1,574 பேர் பதிவு செய்த நிலையில் மெகா ஏலத்தில் 574 பேர் தேர்வு செய்யப்படுவர். 574 ஐ.பி.எல் வீரர்களில் 368 இந்தியர்கள் மற்றும் 209 வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில், முதல் வீரராக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி அவரை தக்க வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வீரர் ககிஸோ ரபாடா ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி வாங்கியுள்ளது. அதே போல், ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை ஏலம் எடுத்தது. இதையடுத்து, இந்திய வீரரான ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன விரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதுவரை அதிகபட்சமாக விராட் கோலி ரூ.23 கோடிக்கு ஏலம் போன நிலையில் ரிஷப் பந்த் அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடி ஏலம் எடுத்து வாங்கியது. தென் ஆப்பிரிக்கா வீரர் டுபிளஸ்ஸியை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. வாசிங்க்டன் சுந்தரை குஜராத் அணி ரூ3.02 கோடிக்கும், சாம் கரணை சென்னை அணி ரூ.2.40 கோடிக்கும் ஏலம் எடுத்து வாங்கியது. குருணல் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கும் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணிக்காக விளையாடி வந்த துஷார் தேஷ்பாண்டேவை ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் போட்டியில் 13 வயது வீரர் ஒருவரை கோடியில் ஏலம் எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 13 வயதான பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்சி எனும் வீரரை வாங்க அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தில் ஏலம் தொடங்கிய நிலையில், ராஜஸ்தான் அணிக்கும், டெல்லி அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில், வைபவ் சூர்யவன்சியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்து வாங்கியுள்ளது. இதன் மூலம் மிக குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்சி பெற்றுள்ளார்.
அண்மையில், 19 வயதுக்குட்பட்ட இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்களிடையேயான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சிவப்பு பந்து போட்டிகளில் முதல்முறையாக களம் இறங்கிய வைபவ சூர்யவன்சி, 58 பந்துகளில் வேகமாக சதம் அடித்து உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார். 12 வயதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய இந்த சிறுவன், அதற்கு அடுத்த வயதிலேயே ஐபிஎல் தொடரில் களமாட இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.