கேரளா குடும்பத்தினரிடமிருந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை மீட்க, தமிழக முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியை, கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். தேவர் சமுதாயத்திற்காகவும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன்கருதியும் துவங்கப்பட்ட இந்த கல்லூரியை, தனிநபர் ஆதிக்கத்தில் இருந்து மீட்க பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
முன்னாள் மாணவர்கள் சங்கம், சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கம், பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள், கல்லூரியை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரியை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி, கல்லூரியில் 13 அமைப்புகள் இணைந்து நேற்று (9-ஆம் தேதி) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்த போராட்டக் குழுவினருக்கு அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் போராட்டக் குழுவினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தேவர் கல்லூரி மீட்பு இயக்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம், சட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பாதுகாப்பு சங்கம், தமிழ் சமூக நலன் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், கோட்டாட்சியர் முருகசெல்வி, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், தாசில்தார் திருமலைசெல்வி, திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது; உசிலம்பட்டி, கமுதி மற்றும் சங்கரன்கோவில் அருகிலுள்ள மேலநீலிதநல்லூரில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில், 1969-ம் ஆண்டு, பி.எம்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கமுதியில் உள்ள பி.எம்.டி. கல்லூரி சில காரணங்களால் தற்போது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது. அரசின் அனுமதி பெற்ற சங்கமான தேவர் எஜுகேஷனல் சொசைட்டியின் (43/1969) பெயரில்தான், பொது மக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என, அனைவரிடமும் பொது நிதி உதவி பெற்றும், நிலம் தானமாகப் பெற்றும், கல்லூரியை கட்டமைக்கத் தேவையான உதவி பெற்றும், பல கிராம மக்கள், ஊதியம் இல்லாமல் தங்களின் உழைப்பைக் கொடுத்து, வேர்வையை இரத்தமாக சிந்தி, உருவாக்கப்பட்ட கல்லூரிதான், இந்த மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி.
தேவர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு சமுதாய மக்களின் நலனுக்காகவும் இந்த தேவர் கல்லூரி நிறுவப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரி இன்றைக்கு தேவர் காலேஜ் என்பது மாறி, நாயர் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் மட்டுமல்ல, அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர், தனிநபர் ஆதிக்கத்திலிருந்து கல்லூரியை மீட்க போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன்னையா தேவரின் இரண்டாவது மனைவியான ரமாதேவி என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், இந்தக் கல்லூரி நிர்வாகத்தை தற்போது கவனித்து வருகிறார்.
பைலாபடி, கல்லூரி உறுப்பினர்கள், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும், இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு மாறாக, தனிநபர் கையில் நிர்வாகம் நடைபெறுவதாகக் கூறி, அங்குள்ள மாணவர்கள் அமைப்புகள், முன்னாள் மாணவர் சங்கங்கள், தேவர் சமுதாய அமைப்புகள், எங்களிடம் அணுகி விவரத்தைக் கூறினார்கள்.
25 நாட்களுக்கு முன்பாக, இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவரம் கூறினேன். இந்தக் கல்லூரி பிரச்சனை குறித்து அனைத்து விவரங்களும் தமிழக முதல்வருக்கு நன்றாகத் தெரியும். கல்லூரியின் பிரச்சனை குறித்து, அனைத்து ஆவணங்களுடன் என்னை வந்து சந்திக்குமாறு தமிழக முதல்வர் என்னிடம் கூறினார்.
தற்போது, 15 அமைப்புகள் சேர்ந்து, கல்லூரியை மீட்கக்கோரி, அந்த கல்லூரி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாங்கள் அழைத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். கல்லூரி மீட்பு குழு நிர்வாகிகள், நாங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்லூரியை மீட்டு, கல்லூரி மீட்புக் குழுவினரிடம் ஒப்படைப்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கும்.
பேச்சுவார்த்தை விவரங்களை அனைத்தையும், சென்னை சென்று தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறுவோம். கல்லூரி மீட்பு குழு நிர்வாகிகளை தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று அரசினால் முடிவெடுக்க முடியாது. எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பலமுறை கல்லூரி நிர்வாகத்தை அழைத்தும், அவர்கள் வரவில்லை என்று பதிவாளர் தரப்பில் பதியப்பட்டுள்ளது. மூன்று முறை கல்லூரி நிர்வாகத்துக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. சட்டப்படி கல்லூரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், கல்லூரி மீட்பு குழுவினருக்கும், தேவர் சமுதாயத்தினருக்கும் அனைத்து உரிமையும் உள்ளது. பிரச்சனை வெடிக்கும் போதுதான், பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஒரு வீட்டில் பிரச்சனை என்றால், வீட்டுக்குள் இருக்கும் போது தெரியாது. வெடிக்கும்போது வெளியில் தெரியவரும். அரசைப் பொறுத்த வரையில், தவறான நடவடிக்கைகளுக்கு என்றுமே உறுதுணையாக இருக்காது. தேவர் எஜுகேஷனல் திருநெல்வேலி என்ற பெயரில்தான், அரசு அன்றைய தினம் அங்கீகாரம் வழங்கியது. தமிழக வளர்ச்சிக்காக, இளைஞர்கள் வளர்ச்சிக்காக, அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காக, கல்லூரியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கல்லூரி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, இந்த அரசு உறுதுணையாக இருக்கும். கல்லூரி தொடர்ந்து இயங்க வேண்டும். இந்த தேவர் கல்லூரி மீட்பு பிரச்னையில், தமிழக முதல்வர் விரைவாக முடிவெடுப்பார்.” என்று பேசினார்.