ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி பேரணியாக சென்றவர்களில் மீனவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதில் 8 பேர் மீனவர்கள். இதனால் ஆத்திரமான திரேஸ்புரம் மீனவர்கள் தங்களின் பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக வந்த போலீசாரை விரட்டியிருக்கிறார்கள்.
இன்று மீண்டும் போலீஸ் உள்ளே செல்ல முயன்றபோது, எல்லையில் மீனவர்கள் படகுகளை போட்டு வழியை மறித்தனர். எங்களது பகுதிகளில் போலீசாரோ, பத்திரிக்கையாளர்களோ யாரும் வரக்கூடாது. எங்களோட பாட்டை நாங்க பார்த்துக்கிறோம். திரும்பிப்போங்கள். படமோ, போட்டோவோ எடுக்கக்கூடாது என்றதால் நாம் திரும்ப வேண்யதாயிற்று.
அதே சமயம், துப்பாக்கி சூடு காரணமாக படுகாயமுற்ற செல்வசேகர் (42), சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததால் அவரது ஊரான சாயபுரம் அருகே உள்ள இருவப்பபுரம் கொந்தளிப்பாக இருக்கிறது. இன்று காலை யாரும் உள்ளே வரக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அவர்களை தடுக்கும் அரசோ, அதிகாரிகளோ வருவதை தடுக்கும் பொருட்டு, சாலையில் வேலி முட்கள், மரங்களை வெட்டிப்போட்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதனால் அங்கு அதிகாரிகள் போகமுடியாத சூழ்நிலை. இது ஒருபுறம் இருக்க அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதிகளில் போலீசின் தொந்தரவு காரணமாக பதற்றம் தனியாக நிலையில் அந்த பகுதியில் சட்டத்துக்கு புறம்பானவர்களின் நடமாட்டம் இருக்கிறதா. அல்லது ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் பொருட்டு நெல்லை டி.சி. சுகுணா சிங் தலைமையில் அதிகாரிகள் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு வேவு பார்க்கும் வகையில் போட்டோக்களை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியை சுற்றி நிலைமை இப்படி இருக்க இன்று மதியத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஓரிரு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம் காய்கறி விலையோ பட்டர் பீன்ஸ், சௌசௌ கிலோ 150 ரூபாய் அளவுக்கு விற்கிறது. கத்திரி, கேரட் கிலோ 100 ரூபாய், தக்காளி, வெங்காயம் கிலோ 50 ரூபாய். இன்று முகூர்ந்த நாள் என்பதால் காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்கிறார் காய்கறி புரோக்கர் சுப்பையா.
மேலும், மதியம் 12 மணிக்கு மேல் மதுரை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் காய்கறிகள் வரத்தொடங்கியதால் தற்போது கூடிய காய்கறிகளின் விலையில் சற்று சரிந்திருக்கிறது. பால் ஒரு லிட்டர் நேற்று 70 ரூபாய்க்கு விற்றது. இன்று மதியம் முதல் 40 ரூபாய் குறைந்துள்ளது. கடைகள் திறந்திருக்கின்றன.