Skip to main content

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு! உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணை தள்ளிவைப்பு!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவிகாலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் தற்போது பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

pon.manikkavel's post extension! Postponement of inquiry without order


இதேபோல், பொன் மாணிக்கவேலின் பதவிகாலம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்,  கால நீட்டிப்பு செய்ய உத்தரவிடக் கோரி பொன். மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளும்  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கு டிசம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை  உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பொன். மாணிக்கவேல் தரப்பில், உச்ச நீதிமன்றம் அதுபோன்ற எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
 

pon.manikkavel's post extension! Postponement of inquiry without order

 

பொன். மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில்,  பொன். மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் தரப்பில்,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை  மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டனர். நவம்பர் 30-ஆம் தேதியுடன் பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைவதால், அதன்பின் அவரைப் பணி நீக்கம் செய்ய அரசு முயற்சிப்பதாகவும் டிராபிக் ராமசாமி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,   பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த  2018 நவம்பர் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என கூறப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டனர்.  அவரது பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தனர். மேலும், பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்,   பதவி நீட்டிப்பு கோரிய மனு மீதான விசாரணையை  டிசம்பர் 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஏதேனும் பதவிக்கு பாதிப்பு ஏற்பட்டால்,  உடனடியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடலாம்  எனவும், பதவி நீட்டிப்பு மனுவைப் பொறுத்தவரை,  தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
 

அப்போது, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணைகளில் 2 அமைச்சர்கள் தலையிடுவதாக பொன். மாணிக்கவேல் குறிப்பிட்டிருந்தார்.  அதே நேரத்தில், மேலும் ஒரு அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுகிறார் என குற்றம் சாட்டினார். எனவே, அந்த அமைச்சர்களின் பெயரை  பொன். மாணிக்கவேல் வெளியிட வேண்டும் என கோரினார்.

இதையடுத்து அனைத்து வழக்குகளின் விசாரணையையும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள்  தள்ளி வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்