சேலத்தில், காவல்துறையினர் பொய் வழக்கில் கைது செய்ததாகக் கூறி, சிறைக்கைதி ஒருவர் சுவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). ஆட்டோ ஓட்டுநர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று அவருடைய ஆட்டோ மீது மோதுவதுபோல் வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கார் கண்ணாடி மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
![salem prisoner incident hasthampatti police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/M5glPlZqpqFQby0Oue6VIV1RlvJ2uj_6BVKgPhN_YQ4/1580634684/sites/default/files/inline-images/salem%20central%20jail%20%281%293333.jpg)
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ராஜேஷ், தன் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துவிட்டதாகக் கூறி, உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றவாறே திடீரென்று சிறையின் உள்புற சுற்றுச்சுவர் மீது ஏறி நின்றார். சிறைக்காவலர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது, சுவர் மீது இருந்து கீழே குதித்து விட்டார். அவருடைய கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி மதிவாணன், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.