சேலத்தில், தொடர்ந்து வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று ரவுடிகள் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த எல்லப்பன் மகன் அருள்மணி என்கிற டியூக் அருள் (வயது 25), சேலம் கிச்சிப்பாளையம் ஜானகி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சஞ்சய் (வயது 19), கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பூபாலன் (வயது 30) ஆகிய மூவரும் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களில், அருள்மணி என்கிற டியூக் அருள், பெருமாள்மலை அடிவாரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை வழிமறித்து கத்தி முனையில் பணம், செல்போன் பறித்துக் கொண்டதாக கடந்த மே 28- ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு உள்பட மூன்று வழிப்பறி வழக்குகள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் டியூக் அருள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மற்றொரு ரவுடியான சஞ்சய், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை திருடியதாக, கடந்த 2021- ஆம் ஆண்டு, அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிணையில் விடுதலையான சஞ்சய், கடந்த ஜூன் மாதம், மாமாங்கத்தில் 1.55 லட்சம் மதிப்பிலான இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். மேலும், மாமாங்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளதாகவும் சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
ரவுடி பூபாலன் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும் இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
அருள்மணி, சஞ்சய், பூபாலன் ஆகிய மூவரும் சிறைக்குச் சென்ற பிறகும் திருந்தி வாழாமல், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோதாவுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், காவல்துறை ஆணையர் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் மூன்று ரவுகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.