திருச்சி கருமண்டபம் என்றாலே ஒரு தாழ்வான பகுதி, மழைக் காலங்களில் இடுப்பு அளவிற்குத் தண்ணீர் நிற்கும் என்ற அடையாளத்தைக் கொண்டதாக இருந்தாலும், ஒருசிலப் பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கான வழிமுறைகளை அந்தந்த காலங்களில் அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கருமண்டபம் பகுதியில் உள்ள ஜெ.ஆர்.எஸ் நகர் மற்றும் வசந்த நகர் ஆகிய பகுதிகளில் 20 அகலம் உள்ள கால்வாய் இருந்தது. கடந்த 20 வருடத்திற்கு முன்பு பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த கால்வாய், அருகில் உள்ள கோரையாற்றில் போய் கலக்கும். தற்போது குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் வீடுகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் தேவைக்குப் போக மீதம் கொஞ்சம் இடத்தை விட்டு வைத்துள்ளனர். அதுவும் தற்போது அந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஒருசில இடங்களில் 8 அடி அகலத்திற்குக் கருங்கற்களால் கட்டப்பட்டு, அந்த கால்வாய் இருந்துவருகிறது. தற்போது அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால், மழைக் காலங்களில் அந்தப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக அந்த கால்வாய் ஒரு இடத்தில் சுமார் 2அடி மட்டுமே உள்ளது. 20 அடி வாய்க்கால் 2 அடி மட்டுமே கழிவுநீர் செல்ல வழிவிடப்பட்டு, மீதம் உள்ள இடங்களைத் தனியார் நில விற்பனையாளா்கள், ஆக்கிரமிப்பு செய்து, அதில் வீடும் கட்டி விற்பனை செய்துள்ளனர்.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெருமளவில் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுக்குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் முறையாக இப்பகுதியை அளந்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இப்பகுதியில் சாலைகளையும் பலர் ஆக்கிரமிப்பு செய்து பெரிய கதவுகள் வைத்து பாதைகளையும் அடைத்துள்ளதாகவும், அதையும் அதிகாரிகள் அகற்றி பொதுமக்கள் சுலபமாக மாநகராட்சி சாலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.