
சேலம் பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம்(3.9.2024) மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மாணவி வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருவதும், மதுபோதையில் மயங்கிக் கிடந்ததும் தெரியவந்தது. மேலும், மருத்துவ பரிசோதனையில் மாணவி வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் அவரை யாரோ இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவியை இரும்பு கடை வியாபாரி கோவிந்தசாமி என்பவர் தனியாக அழைத்து சென்று அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மாணவிக்கு வலிப்பு ஏற்படவே, அச்சத்தில் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து சாலையோரம் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. மாணவி ஏற்கனவே கோவிந்தசாமியின் இரும்பு கடையில் வேலைப்பார்த்தாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரும்பு வியாபாரி கோவிந்தசாமியை இன்று கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.