Skip to main content

சேலம் வந்த இந்தோனேஷிய குழுவினர் 11 பேருக்கு கரோனா பரிசோதனை!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 


இந்தோனேஷியாவில் இருந்து சேலம் வந்துள்ள இஸ்லாமிய ஆன்மிக குழுவைச் சேர்ந்த 11 பேர், கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நேற்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. என்றாலும், மார்ச் 31ம் தேதி முடிய கூட்டமாக கூடுதல் உள்ளிட்ட நோய் தொற்றுக்கான வழிமூலங்களை தவிர்க்கும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களை தனியாக வைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Salem




சில நாடுகளில் இருந்து வந்த நபர்கள் ஆங்காங்கே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களைக் கண்டறிந்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 


இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் கொண்ட இஸ்லாமிய ஆன்மிக குழுவினர், மார்ச் 11ம் தேதி சென்னை வந்திருந்தனர். அதற்கு அடுத்த நாள் அவர்கள் சேலம் வந்தனர். இங்குள்ள களரம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்து, இந்தோனேஷியாவில் நடக்கும் தொழுகை உள்ளிட்ட வழிபாடுகள் குறித்து சேலம்வாழ் முஸ்லிம்களிடம் பரப்புரை செய்து வருகின்றனர். பல நாள்களுக்கு இங்கேயே தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளனர்.


இதுகுறித்து சேலம் மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு மருத்துவக்குழுவினர், இந்தோனேஷிய இஸ்லாமிய குழுவினர் தங்கியிருந்த ஜெய் நகர் மசூதிக்குச் சென்றனர். அங்கிருந்த 11 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று குறித்தும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவப்பரிசோதனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


முன்னதாக இக்குழுவினர், சேலத்தில் சில மசூதிகளில் தங்கியிருந்தனர். அவர்கள் வெளியிடங்கள் எங்கேயும் செல்லவில்லை. இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முழுமையான முடிவுகள் தெரிய வந்த பிறகே, விரிவான விவரங்கள் தெரிய வரும் என்கிறார்கள அதிகாரிகள்.


சேலத்தில் வெளிநாட்டினர் யாராவது வந்து தங்கியிருந்தாலோ அல்லது வெளிநாடு சென்று திரும்பியவர்களாக இருந்தாலோ அவர்களைப் பற்றி உடனடியாக காவல்துறை அல்லது பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்