சேலம் கோட்டை முகமது காசிம் தெருவைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா. இவருடைய மகன் சலீம் என்கிற சலீம் பாஷா (30). கடந்த 2018ம் ஆண்டு, சலீம்பாஷா அவருடைய கூட்டாளி வாசிம் அக்ரம் என்பவருடன் சேர்ந்து, சின்னசாமி தெருவைச் சேர்ந்த சீனி சந்தோஷ் என்பவரை செங்கல் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக வந்த புகாரின்பேரில், சேலம் நகர காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்த அவர்கள், பழைய விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம், சீனி சந்தோஷூக்குச் சொந்தமான 6 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு, மீண்டும் ஜாமினில் விடுதலையான சலீம்பாஷா, கூட்டாளி ரஹ்மான் என்பவருடன் சேர்ந்து 9.7.2019ம் தேதியன்று, கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்த கபீர் முகமது என்பவருடைய வீட்டு வாசல் கதவுக்கு தீ வைத்தார். இந்த வழக்கிலும் கைதாகி மீண்டும் வெளியே வந்த சலீம், 12.1.2020ம் தேதி ரியாசுதீன் என்பவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார்.
தொடர்ந்து சைக்கோபோல வாகனங்களை தீ வைத்து எரித்தல் மற்றும் வழிப்போக்கர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சலீம் என்கிற சலீம்பாஷாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சலீம் பாஷா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சலீம்பாஷாவிடம் ஜன. 28ம் தேதி சார்வு செய்யப்பட்டது.