சேலத்தில், சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் 5.80 கோடி ரூபாயில் புதிதாக அறிவியல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரை சீர்மிகு நகரமாக்கும் திட்டத்திற்காக 965.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், 81 வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக புதிதாக அறிவியல் பூங்கா கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டது.
அறிவியல் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, 5.80 கோடி ரூபாயில் அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
மாநகராட்சி ஆணையர் சதீஷ், அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். மனித உடலில் நோய் ஏற்படும் விதம், பரவும் விதம், சுகாதாரத்தை பேணுதல் குறித்த விழிப்புணர்வு பலகைகள் இப்பூங்காவில் இடம் பெறுகின்றன. மேலும், விண்வெளி ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகியவற்றை கண்டு ரசிக்கும் கோளரங்கம் இப்பூங்காவில் அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 30 பேர் வரை இந்த கோளரங்கத்தில் அமர்ந்து பார்க்கலாம்.
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் வானொலி, ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியர்களின் வகைகள், மணிக்கூண்டின் செயல்பாடுகள், கியர் ரயில்கள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேகமாக கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகளும் வைக்கப்பட உள்ளன.
உள் அரங்கில் 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களின் கண்காட்சி, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன.
வாகன நிறுத்தம் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அறிவியல் பூங்கா வளாகத்தில் ஏற்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.