![Salem District Police New S.P. Arun Kapolan takes charge!](http://image.nakkheeran.in/cdn/farfuture/bnUDo3tof1GqxkgRdckobKsm-cGj-0oXUpPSa16RPTw/1691833054/sites/default/files/inline-images/th_4591.jpg)
சேலம் மாவட்ட காவல்துறை புதிய எஸ்.பி.யாக அருண் கபிலன் வெள்ளிக்கிழமை (ஆக. 11) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகக் காவல்துறையில் பணியாற்றி வந்த எஸ்.பி. அந்தஸ்திலான 33 அதிகாரிகளை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, திடீரென்று இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் அமுதா உத்தரவிட்டார். அப்போது, சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த மருத்துவர் ஆர். சிவக்குமார், சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, சென்னை டி.நகர் சரக துணை ஆணையராக பணியாற்றி வந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர், சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில், ஆக. 11ம் தேதி எஸ்.பி. ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம் மாவட்டக் காவல்துறையில் கடந்த 20 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட எஸ்.பி.க்களில் மிக இளம் வயதுடையவர் அருண் கபிலன் என்பது குறிப்பிடத்தக்கது. 27 வயதேயான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவருடைய பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். தந்தை, தென்னக ரயில்வேயில் பணியாற்றுகிறார். பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ள எஸ்.பி. அருண் கபிலன், கடந்த 2018 ஆம் ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 472வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த அவருக்கு, முதன்முதலாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு, ஏ.எஸ்.பி. ஆக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, சென்னை டி.நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு, தற்போது சேலம் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏ.டி.எஸ்.பி.க்கள் செல்வம், கண்ணன், டி.எஸ்.பி.க்கள் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்டத் தலைமைக் காவல்துறை அலுவலக ஊழியர்கள் புதிய எஸ்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.