சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். சேலம் மணக்காடு ராஜகணபதி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி யோகேஸ்வரி (28). நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வேலை நிமித்தமாக யோகேஸ்வரி கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் நாமக்கல்லில் வசித்து வந்தார். இந்நிலையில் யோகேஸ்வரிக்கு கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் மீண்டும் பணிக்குச் சென்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
![SALEM DISTRICT MANAKKADU AREA DENGUE FEVER WOMEN INCIDENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/kORdPG_0-T3rpgYzUp6qI0Ty5dZtN5Ndjg9sza7TVZo/1571335861/sites/default/files/inline-images/YOGESHWARI5555.jpg)
இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. உடலில் ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை 1.20 லட்சமாக குறைந்து இருந்தன. அவருக்கு தனிப்பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (அக். 17) யோகேஸ்வரி உயிரிழந்தார்.
சேலத்தில் கடந்த ஒரு மாதமாகவே பரவலாக டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் மணக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.