Skip to main content

வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி கல்லால் தாக்கி கொலை!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

salem district incident police investigation

 

சேலம் அருகே, வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அ.நாட்டாமங்கலம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோடி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். 

 

இவர்களுடைய இரண்டாவது மகன் மணி (எ) மணிகண்டன் (வயது 30). கட்டடத் தொழிலாளி. பிறவியிலேயே வாய் பேச இயலாத, காது கேட்காத  மாற்றுத்திறனாளி. 

 

கடந்த திங்கள்கிழமை (04.10.2021) இரவு 10.00 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, காரிப்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள கரட்டில் நிர்வாண நிலையில் மணிகண்டன் சடலமாகக் கிடப்பது குறித்து காரிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. 

 

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மர்ம நபர்கள் மணிகண்டனை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவருடைய வயிற்றில் மது பாட்டிலால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. அதனால் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் தெரிந்த நபர்களே மணிகண்டனை தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி என்பதால் மணிகண்டனால் கத்திக் கூச்சலும் போட முடியாமல் தடுமாறி இருக்கிறார்.

 

சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் நேரில் சென்று பார்வையிட்டார். காரிப்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

 

விசாரணையில், கொலையுண்ட மணிகண்டன் அக். 3ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுடன் அவர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த இருவரின் வீடுகளிலும் காவல்துறையினர் சென்று விசாரித்தபோது, இருவரும் திடீரென்று தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. 

 

தீவிர தேடுதலுக்குப் பிறகு, அவர்களில் ஒருவரைப் பிடித்துவிட்டனர். வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி, ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.  

 

விசாரணையில் பிடிபட்ட நபரும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிக்கிய வாழப்பாடியைச் சேர்ந்த மற்றொரு நபரும் சேர்ந்துதான் மணிகண்டனை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் தேடிவருகின்றனர். அவரும் பிடிபட்டால்தான், கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்