சேலம் மாநகர நல அலுவலர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகார்களின்பேரில் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஏப். 16) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகர் நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் பார்த்திபன். இவருடைய குடியிருப்பு, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பார்த்திபன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்று காலை 08.00 மணியளவில், அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வாளர் தங்கமணி தலைமையில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. சேலம் மாநகரில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிளினிக்குகள் சுகாதாரத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நகர் நல அலுவலருக்கு கையூட்டு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
சேலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கணக்கிட்டுதான் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் பார்த்திபன், ஏற்கனவே கடந்த 2017- ல் மதுரை மாநகராட்சியில் நல அலுவலராகப் பணியாற்றியுள்ளார். அப்போது மருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வந்த புகார்கள் குறித்தும் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாநகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் நடத்திய திடீர் சோதனை, மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.