சேலத்தில் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடல், பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல். காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கதிர்வேல் உள்ளிட்ட சிலரை காரிப்பட்டி காவல்துறையினர் தேடி வந்தனர். மே 1ம் தேதி இரவு அவரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக மே 2ம் தேதி காலையில், குள்ளம்பட்டியில் உள்ள ஓர் ஆலமரத்தடிக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது காவல்துறையினரை கத்தியால் தாக்க முயற்சித்த கதிர்வேலை, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அன்றே சடலம் உடற்கூறாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்கள் கிளப்ப, மறுநாளான மே 3ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடந்தது.
சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் என்கவுண்டர் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையில், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் கோகுலரமணன், மருத்துவர் கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் பகல் 12.15 மணிக்கு தொடங்கிய உடற்கூறாய்வு பணிகள் மதியம் 2 மணிக்கு முடிந்தன. இவை அனைத்துமே வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வுக்குப் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சடலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல், சேலத்தை அடுத்த காட்டூரைச் சேர்ந்த திமுக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஆனந்தன் என்பவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார். கதிர்வேலின் தம்பி பூபதி, பாமகவில் இருக்கிறார். அதனால் உள்ளூர்க்காரர்கள், கட்சிக்காரர்கள் ஏதேனும் கலாட்டா செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
கதிர்வேலின் வீடு அருகில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் சுடுகாடு வரைக்கும் ஊர்வலமாக சென்றது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், உறவினர்கள் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக சென்றனர்.
சுடுகாட்டில் கதிர்வேலின் சடலத்திற்கு அவருடைய தந்தை சேட்டு, தம்பி பூபதி ஆகியோர் இறுதி காரியங்களை செய்தனர். தம்பி பூபதி, கொள்ளி வைத்தார். இந்தக் காட்சிகள் அனைத்தையும், கியூ பிராஞ்ச், மாவட்ட தனிப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி காவல்துறையினர் கேமராவில் பதிவு செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கதிர்வேலின் தந்தை சேட்டு மற்றும் உறவுக்காரர் ஒருவர் கூறுகையில், ''எல்லா பத்திரிகை, டிவிகளிலும் பிரபல ரவுடி என்று கதிர்வேலை குறிப்பிட்டு செய்தி போடுகின்றனர். அந்தளவுக்கு பிரபல ரவுடியாக இருந்து சொத்து சேர்த்து இருந்தால் இந்த ஒழுகும் வீட்டிலா குடியிருப்பான்? இந்நேரம் அடுக்குமாடி வீடு கட்டியிருக்க மாட்டானா?
கணேசன் கொலை வழக்கில் சரணடையப் போனவனை, அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டனர். அவன் வீட்டுக்கு வந்தே 20 நாளாச்சுங்க. மே 1ம் தேதி இரவுதான், அயோத்தியாப்பட்டணம் ரயில்வேகேட் அருகே காவல்துறையினர் டிபன் வாங்கி கொடுத்ததாகவும், டிபன் சாப்பிட்டதாகவும் போனில் சொன்னான். இதற்குமேல் புலம்பி என்ன ஆகப்போகிறது?'' என விரக்தியாக கூறினர்.