சேலம் மத்திய சிறையில் பத்து ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த 30 கைதிகள் இன்று (செப். 21, 2018) விடுதலை செய்யப்பட்டனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறு அல்லது சூழ்நிலைகளால் குற்றவாளிகளாக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 500க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை சேலம் மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று மேலும் 30 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்படும்போது, திருந்தி வாழ வேண்டும் என்றும், மீண்டும் குற்ற வழிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
விடுதலை ஆன கைதிகளை வரவேற்று அழைத்துச்செல்ல அவர்களின் உறவினர்கள் சிறை வாயில் முன்பு கூடியிருந்தனர். வெளியே வந்த கைதிகளை அவர்களின் உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.