தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கம், உலக சுகாதார நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் இந்தியாவில் காற்று மாசுபாடுடைய 102 நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நகரங்களில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. கேட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.
’’நாட்டில் காற்று மாசு கொண்ட நகரங்களை ஆதார ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே.. அந்த நகரங்களின் பட்டியலை அரசு வெளியிடுமா? இந்த ஆய்வுக்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? காற்று மாசு கொண்ட நகரங்களில் காற்று மாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா?’’ என்று கேள்விகளை எழுத்துபூர்வமாக வைத்தார் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.
இதற்கு பதிலளித்த மத்திய வனம், சுற்றுச்சூழல்துறை, கால நிலை மாற்றத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, “தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கத்தின் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாத நகரங்கள் கண்டறியப்பட்டன. அதேநேரம் உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி காற்று மாசுநகரங்கள் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் மொத்தம் 102 நகரங்கள் காற்று மாசு கொண்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே காற்று மாசுபாடு கொண்ட நகராக இருக்கிறது.
காற்று மாசுக் கட்டுப்பாட்டை அடைய முடியாத நகரங்களில் இரண்டு ஆண்டுகளுக்குள் அதற்கான ஆய்வுகளை நடத்தி முடிக்க காற்றுத் தர கண்காணிப்பு இயக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றோடு இணைந்து பல்கலைக் கழகங்களில், கல்வி நிலையங்களில் காற்று மாசு கட்டுப்பாடு பற்றிய ஆய்வுகளை நடத்த இருக்கின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாடுமுழுதும் தூய காற்றுக்கான, காற்று தர கண்காணிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.
இதன்படி நாட்டிலுள்ள 29 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 307 நகரங்களில் மொத்தம் 703 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, சேலம், மேட்டூர், கோயமுத்தூர், கடலூர், திருச்சி ஆகிய எட்டு நகரங்களில் 31 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 703 நிலையங்களை ஆயிரம் காற்று தர கண்காணிப்பு நிலையங்களாக அதிகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை தவிர 17 மாநிலங்களில் 68 நகரங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தமிழகத்தில் சென்னையில் ஆலந்தூர், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இதேபோல இன்னும் 108 தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இவற்றில் 60 நிலையங்கள் 2019 ஜூன் மாதத்துக்குள் நிறுவப்படும். கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்படும். மற்ற நிலையங்கள் மாநில அரசுகளின் பங்கேற்போடு இந்த வருட இறுதிக்குள் அமைக்கப்படும்” என்று பதில் அளித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா.