கிராமப் புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் நூறு நாட்களாவது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் கடந்த 02-02-2006-ல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயர் மாற்றத்தோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு 90 விழுக்காடும், மாநில அரசு 10 விழுக்காடும் நிதி ஒதுக்குகிறது.
ஒரு கிராமத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி போன்ற நீராதரங்களை சீரமைத்தல், கிணறு மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தரிசு நிலங்களை சீரமைத்து, மரக்கன்றுகள் நடுதல், சாலை வசதி இல்லாத ஊரக பகுதிகளில் இணைப்பு சாலை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம். 01-04-2018 முதல் இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.224 தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கிராமங்களில் செய்த பணியின் அளவை பொறுத்து கூலி மாறுபடலாம். ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் மட்டுமே வேலை. அதேபோல், பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்பது அரசின் எண்ணம்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. எல்லா கிராமத்திலும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர்களே இந்த திட்டத்தை மேற்பார்வை செய்வர். அவர்கள் தான் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, நூதன முறையில் முறைகேடு செய்கின்றனர். குறிப்பாக புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில், செய்யாத பணிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு, பின்னர் சுரண்டப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் மனிதர்களின் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், மணிக்கு ரூ.600-க்கு ஜேசிபிகளை வாடகைக்கு எடுத்து, ஏரி மற்றும் ஓடைக்கரையை தூர்வாரிவிடுவார்கள். அதனை ஆய்வு செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர், பணிகள் நடந்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்துவிடுவார். இதனால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்படும். ஆனால், அந்த பணத்தை வேலையாட்கள் எடுக்க முடியாது. முன் கூட்டியே வங்கி பாஸ் புத்தங்களை வாங்கி வைத்திருக்கும் ஊராட்சி செயலர், பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார். பயனாளிகளும் இதை கண்டுகொள்வதில்லை. எதிர்த்து கேட்டால், அடுத்த மாதம் வேலை தரமாட்டார்கள் என்ற பயம் அவர்களுக்கு. இதேபோல், பல ஊராட்சிகளில் லட்சக் கணக்கில் பணம் கையாடல் செய்யப்படுகிறது. இதை தணிக்கை செய்ய வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என புலம்பினார் நமக்கு தெரிந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, அவர்களோடு வழிநடையாக சென்றவர்கள் எந்த பெட்டிக்கடையிலோ, டீக்கடையிலோ பொருட்கள் வாங்கினாலும், கடை உரிமையாளர்கள் காசு வாங்க மாட்டார்கள். ஏனெனில் சுதந்திரத்திற்காக போராடும் மக்களுக்கு தம்மால் சிறிய உதவி என்ற மனப்பாங்கு. காந்தியோடு சென்றவர்களும் கடைகளில் சாப்பிட்டுவிட்டு, காந்தி மகான் கணக்கு என்று சொல்லிவிட்டு, சென்று விடுவார்கள். இதைத்தான் காந்தி கணக்கு என்பார்கள். இன்று அதே காந்தி பெயரில் செயல்படுத்தப்படும் அரசு திட்டத்தில், அரசாங்கப் பணத்தை சுரண்டுகிறார்கள். தடுக்க வேண்டிய அதிகாரிகளும், அதில் பங்கு போடுகின்றனர்.
Published on 27/08/2018 | Edited on 27/08/2018