சேலம் பிரபல ரவுடி செல்லத்துரையை தீர்த்துக்கட்ட வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் திடீரென்று 15 பேர் இரு வேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். கொலையில், 20- க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்லத்துரை (38). நேற்று முன்தினம் (டிச. 22) இரவு, காரில் வந்த ஒரு மர்ம கும்பல், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பழனிசாமி, பிரபல ரவுடி சூரி, தண்டி ஜெயகுமார், சதீஷ், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு உள்ளூரைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர் உள்பட 7 பேர் கரூர் நீதிமன்றத்திலும், ஜானின் தம்பி சாரதி தலைமையில் 8 பேர் நாமக்கல் நீதிமன்றத்திலும் புதன்கிழமை (டிச. 23) சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ரவுடி சூரியின் மகன்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறை, அவர்களை மொத்தமாக கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த கொலையை 13 பேர் கொண்ட கும்பல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது 15 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 10 பேருக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
காவல்துறை விசாரணையில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி காவல்துறை தரப்பில் நாம் விசாரித்தோம். கொலையுண்ட ரவுடி செல்லத்துரைக்கு உள்ளூரிலேயே எதிரிகள் அதிகம். எதிர் முகாமைச் சேர்ந்த ரவுடிகள் எப்போது தருணம் கிடைத்தாலும் அவரை போட்டுத்தள்ளி விடும் நோக்கில் நீண்ட காலமாகவே வேறு பார்த்து வந்துள்ளனர். இதற்காகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் செல்லத்துரைக்கு எதிர் கோஷ்டியான சூரி, ஜான் உள்பட மேலும் சில ரவுடிகளும் ஒரே அணியில் திரண்டு நின்று செல்லத்துரைக்கு நாள் குறித்துள்ளனர்.
செல்லத்துரைக்கு வலது கரமாக இருந்த ஜான் என்கிற சாணக்கியன், டிக்டாக் செயலியில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகி வந்தார். அவரை கழற்றி விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை ஜான் திருமணம் செய்ய முயன்றபோது, அதற்கு செல்லத்துரை எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், டிக்டாக் பெண்ணை ஜான் மீது புகார் கொடுக்குமாறும் தூண்டியுள்ளார். இதனால்தான் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, செல்லத்துரையை ஜான் பிரிந்து சென்றுள்ளார்.
அதன்பிறகே செல்லத்துரைக்கு எதிர் கோஷ்டியான சூரியுடன் ஜான் இணைந்து கொண்டிருக்கிறார். அவரை தீரத்துக்கட்ட வேலூரைச் சேர்ந்த ரவுடி வசூர் ராஜாவிடம் ஜான் தரப்பு முதல்கட்டமாக 10 லட்சம் ரூபாய் டீல் பேசியுள்ளனர். பணம் கைம்மாறியதை அடுத்து வசூர் ராஜா, செல்லத்துரையை செல்போன் மூலம் மிரட்டி இருக்கிறார். ஆனால் அந்த மிரட்டலை செல்லத்துரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன் பிறகே வசூர் ராஜா அனுப்பி வைத்த குண்டர்கள், உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு செல்லத்துரையை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதையடுத்து வசூர் ராஜா மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிக்கவும் காவல்துறை தனிப்படை விரைந்துள்ளனர்.
ரவுடி வசூர் ராஜா மீது ஏற்கனவே 6 கொலை, 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 47 வழக்குகள் உள்ளன. செல்லத்துரை கொலை, அவருக்கு 48வது வழக்காகும். பெரும்பாலும் சென்னை, பெங்களூரு, கொச்சி ஏரியாக்களில் சுற்றித்திரியும் வசூர் ராஜா, தன்னுடைய குண்டர்கள் மூலமே தமிழ்நாட்டில் ஆள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார். அவ்வளவாக நேரில் களத்தில் இறங்காத வசூர் ராஜா, பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரைத்தேடியும் காவல்துறையில் ஒரு குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.
செல்லத்துரை கொலை வழக்கில் மேலும் பல திடுக்கிடும் மர்மங்கள் வெளி வரும் எனத் தெரிகிறது.