மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக் கோரி நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் நேற்று (02.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களைப் புணரமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் வியாபாரிகள் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், துப்புரவுப் பணிக்காகத் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அதிக எண்ணிக்கை கொண்ட 7 கழிவறைகள் மற்றும் 30 மறு சுழற்சி குப்பைகளைப் போடும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்த வெளி கழிவுநீர் வெளியேற்ற திட்டத்தை மாற்றம் செய்து 8 கிலோ மீட்டர் துரத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளர் ராமநாதன் தாக்கல் செய்த பதில் மனுவில், நாள்தோறும் இரண்டாயிரம் பேர், வார இறுதியில் பத்தாயிரம் பேர் மாமல்லபுரத்திற்கு வருவதாகவும் விடுமுறை தினங்களில் 50 ஆயிரம் பேர் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 290 நிரந்தர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். மீண்டும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க காவல்துறை உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பார்க்கிங் வசதி இல்லாததால், மாமல்லபுரத்திற்கு வெளியே பார்க்கிங் வசதி செய்ய தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி தாக்கல் செய்த பதில் மனுவில் மாமல்லபுரத்திற்கு வரும் அயல்நாட்டினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தனி காவல் பிரிவு உருவாக்கப்பட்டு, ஆங்கிலப் புலமை பெற்ற போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட எத்தனை தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்? தன்னார்வலர்கள் எத்தனை பேர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளி்ல் பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்த விவரங்களை, மத்திய மாநில அரசுகள் ஜனவரி 22- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.